Monday, 22 May 2017

இரும்பை செம்பாக்கும் ரசவாதம்......

இரும்பை செம்பாக்கும் ரசவாதம் இந்த ஆக்கம்தான் வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவாய் வந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் கவனித்தமையால் எண்ணூறாவது பதிவு எனது தனிப்பட்ட எண்ணப் பகிர்வாய் அமைந்தது விட்டது. இனி இரும்பை செம்பாக்கும் வித்தையை பார்ப்போம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே “செம்பு” உயர்வான ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. எத்தனை உயர்வென்றால் ஆதி சித்தனாகிய சிவனின் அம்சமாகவே செம்பு உருவகிக்கப் பட்டிருக்கிறது. தங்கத்தையும் வெள்ளியையும் விட செம்பை உயர்வாகச் சொல்கிறார் போகர்.உயர் உலோகங்கள் என கருதப்படும் தங்கமும், வெள்ளியும் உடல் என்றால் அவற்றின் உயிரைப் போன்றது செம்பு என்கிறார் போகர். இத்தகைய செம்பின் சிறப்பு, தன்மை, வகைகள் பற்றி முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அந்த தகவலை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இரச வாதத்தில் செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றும் பல்வேறு முறைகள் நமக்கு கிடைக்கிறது. எனினும் இன்றைய பதிவில் இரும்பைச் செம்பாக்கும் ஒரு முறையினை நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் பார்க்கத்தான் போகிறோம். முதல் தடவையாக ஒரு செயல் முறையினை வீடியோவாக பகிரும் முயற்சி இது. இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல் கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சதுரகிரி மலை தொடர்பான தொடரில் இந்த தகவலை பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். தேவையான பொருட்கள்: மெல்லிய இரும்பு கம்பி/ இரும்பு ஊசி, கல் தாமரையின் வேர். இரும்பு ஊசி எளிதில் கிடைத்தாலும், கல்தாமரை வேருக்காக பல இடங்களில் தேடி அலைய வேண்டியதாயிற்று. ஒரு வழியாக நீர்கொழும்பு பகுதியில “குடபாடு” என்னும் பகுதியில் கிடைத்தது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. ஒரு பௌர்ணமி நாளில் சூரிய உதயத்திலிருந்து மூன்று நாழிகைக்குள் கல்தாமரை / கற்றாமரை மூலிகைச் செடிக்குக் சாபநிவர்த்தி செய்து அதன் வேரினை சேகரித்துக் கொண்டு வந்தேன். இனி செயல் முறையினை பார்ப்போம். இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து சுத்தம் செய்து, நன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய் சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் அந்த ஊசியை எடுத்தால் அது செம்பாக மாறியிருக்கும். இந்த செயல் முறையினை கீழே உள்ள ஒளித்துண்டில்(வீடியோ) காணலாம். மூலிகையில் நகம் படக் கூடாது என்பதற்காக இந்த செயல்முறைகளின் போது நான் கையுறைகளை ( surgical gloves ) பயன்படுத்தியிருக்கிறேன். சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.